நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்…. மாலை வேளைகளில் வீட்டில் இருந்த எருமை மாடுகள் இரண்டையும் பக்கத்தில் இருந்த ரயில்வே யார்டுக்கு … மேய்த்து கொண்டு வர ,அம்மா ஓட்டி போயி விடுவார்கள் …நடுவில் வீட்டு வேலை செய்ய வர வேண்டுமெனில் என்னை தான் அழைத்து , கொஞ்ச நேரம் எருமைகளை பார்த்து கொள்ள சொல்வார்கள் ..
கூட்ஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் பாதை….ஆதலால்
கூட படிப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் மிகுந்த ரகசியமாய்
கொஞ்ச காலம் அந்த வேலையை செய்து கொண்டிருந்தேன் ….
படிக்கிற பிள்ளை என்று… அம்மா புஸ்தகத்தை எடுத்து கொண்டே போக சொல்லி விடுவார்….நாம பரிட்சைக்குன்னு உட்கார்ந்தாலே படிக்க மாட்டோம் ……
அப்படி தான் அன்றும் போனேன் …..
எருமை அதன் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருந்தது … எனக்கு புத்தகத்தை திறந்து படிக்க விருப்பமில்லை… சும்மா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்
அப்பாவோ மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார் …..அங்கே ..
நகர்ந்து கொண்டிருந்த ஒரு இன்ஜினில் ஏறி சிக்னல் கொடுத்து கொண்டிருந்தார் …எனக்கோ ஆர்வம் அதிகமாகி …அவரை போலவே தாவி மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த அந்த ரயில் இன்ஜினின் ஒரு கூட்ஸ் பெட்டியில் ஏற முயற்சி செய்தேன்..கொஞ்சம் தடுமாறி விட்டாலும் அப்படியே சமாளித்து ஏறி விட்டேன் …யாரும் பார்க்கவில்லை என்று நான் நினைத்து கொண்டதன் விளைவு … சடாரென எல்லாமே நின்றது …யாரோ அப்பாவின் பெயரை சொல்லி சத்தமாக கூப்பிட்டார்கள் ..
நான் ஏறிய இடத்துக்கு வெகு அருகில் அப்பாவின் மேலதிகாரி நின்று கொண்டிருந்திருப்பார் போலே… அவர் நான் ஏறியதை கண்டு பயந்து
விட்டார் … சத்தம் போட்டு அப்பாவை அழைத்து புகார் கொடுக்க ஆரம்பித்து விட்டார்…
“என் மகன் கூட இவ்வளவு குறும்புத்தனம் பண்றது இல்லே .. உங்க பொண்ணு என்ன பண்றா பாருங்க ?… சரி இங்க எதுக்கு அவ வந்தா ?……
அப்பாவோ… “இல்லே சார் .. எருமை மேயுது … அப்படியே பார்த்துக்க சொல்லி நான் தான் சொன்னேன் .”… என்று விளக்கி கொண்டிருந்தார்…
அவ்வளவு தான் .. அதுவரை திட்டி கொண்டிருந்தவர்… என்னை புகழ ஆரம்பித்து விட்டார்…
“பரவாயில்லையே…….இந்த சின்ன வயசில் “…. என்று…..ஏதேதோ ..சொல்லி பாராட்டி கொண்டிருந்தார் ….
“இல்லே சார் ! வீட்டுலே இருந்தா… படிக்கணுமே …. இப்படி வந்து கொஞ்ச நேரம் எருமையை பார்த்துகிட்டா …. இதே இன்ஜினில் ரெண்டு ரவுண்டு அப்பா கூட்டி போவார்…..” என .. அவரிடம் சொல்ல தான் முடியுமா …
அந்த மனுஷன் அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை ….வீட்டில் ..வீதியில் என ஒரு கொள்கையோடு ,என் புகழை பரப்பவும் ஆரம்பித்து விட்டார்..
அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனால் … கிளாஸ்க்குள் நுழைந்தவுடன் நம்ம புகழ் தான் … மானாவாரியாய் ஓட்ட ஆரம்பித்திருந்தனர் …….
“எல்லாரும் ஆபிசர் மக்கள் ……ஏழுமணிக்கு எழுந்திருப்பவர்கள் … என் வீட்டு வேலை… நான் பகிர்ந்து செய்கிறேன்” என்று சொன்னால் புரியவா போகிறது ….
இந்த கேலி தொடர ஆரம்பித்து விட்டது ….நாட்கள் செல்ல செல்ல அதிகமாகி விட்டது ….
ஒரு நாள் விளையாட்டு நேரத்தில், கேலிகள் பொறுக்க முடியாமல் கோபித்து கொண்டு அருகே இருந்த மரத்தடியில் உட்கார வந்தேன் ……
அப்போது தான் நான் அவளை பார்த்தேன் ….கணக்கு பாடம் எழுதி கொண்டிருந்தாள்
வெளியில் நடந்தவற்றை பார்த்து கொண்டிருந்தாள் போலும்
“என்ன விளையாட போகலியா “….என்றவாறே சிரித்தாள் ..
“என்ன கேலி செய்யறியா”
“எதுக்கு ” என்பது போல் ஒரு நிமிடம் என்னை பார்த்தாள்..
பின் எழுதுவதை தொடர்ந்தாள்
“அதான் எருமை மேய்கிரன்னு எல்லாரும் சிரிக்கிறார்களே” …….என்றேன்
“இதுலே என்ன இருக்கு…?
உங்க வீட்டுலே இருக்கு நீ மேய்க்கிரே
எங்க வீட்டுலே இருந்திருந்தா நானும் அதைத்தானே செய்வேன் ……”
என்றவாறே … எழுதி கொண்டிருந்தாள்
அவள் தான் ….அவளின் அந்த வார்த்தை தான் ….. நான் அவளை நட்பாய்….ஏற்று கொள்ள செய்தது …அதுவரை யாரையுமே வா என்று என் வீட்டுக்கு அழைக்காத நான் …அவளை வாரந்தோறும் வரவேற்க ஆரம்பித்திருந்தேன். …