கடவுளையே நினைத்திராத மனிதர்களுக்கும்
காலையும் மாலையும் இரு வேளை
பூஜை செய்த பக்தனுக்கும்
பொதுவானது மரணம்…..
கட்டங்கள் போட்டு
வானியலும் ….மண்ணியலும்..கணித்து
வருங்காலம் சொன்னாலும்
இன்ன திசை …
இந்த மார்க்கம்
இந்த நாள் வந்து சேரும்
என எவரும்
எதிர்பார்க்க முடியாதது
ஊகங்களில் தேர் செலுத்த முடியாதது
மரணம் என்கிற மாண்புமிகு நெறி
இலங்கையில் செத்தாலும்
ஈராக்கில் செத்தாலும்
கங்கையில் செத்தாலும்
ஒவ்வொரு மரணமும்…
உயிரோடிருப்பவனை பார்த்து
உயிர் கொலை தவறு
சொல்,செயல் என
அடுத்த மனிதனுக்கான
வன்முறை தவறு என்பதை
உரக்க சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது
மெத்த படித்தவர் எல்லாம்
மேதாவி என்ற பட்டம் கொண்டவர் எல்லாம்
அடுத்தவன் மரணத்தில் அரசியல் செய்து
தனக்குண்டான லாபத்தை பங்கு பிரிக்கையில்
மறந்தும் யோசிக்காத நியாயம்
மரணம்
இவர்கள் பின்பற்றும் …
ஞானம் கெட்ட சாஸ்திரங்கள்
நிம்மதி தருவதில்லை
நாளும் கிழமையும்
நல்ல நேரமும்
பார்த்து பார்த்து
பஞ்சாங்கத்தோடு வாழ்ந்தாலும்
இந்துவுக்கும்
இஸ்லாமியனுக்கும்
மதங்களை கடந்து …
மரணம் மட்டும்
சமமாய் வரும்….
பிறந்த குழந்தைக்கும்
பேர பிள்ளைகள் கண்ட முதியோனுக்கும்
பேதம் கற்பிக்காது
வரும்….
வருகிற போது
சொல்லாமல் கொள்ளாமல் தான் வரும்
கடமைகளை கழுத்து வரை சுமந்து கொண்டிருப்பவனுக்கோ பொறுப்பில்லாதவனுக்கோ
அவகாசம் சிறிதும் கொடுக்காது
அவசரமாய் அழைக்க வரும்
மறந்து விடாதீர்கள்
எது நடந்த போதும்
எப்படி நடந்த போதும்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது…
வயதும், வாழ்க்கையும் ஓடுகிற ஓட்டத்தில்
விஞ்ஞானம் வான் தொட்ட நாட்டிலும்
இயல்புகள் மாறி விடவா போகிறது….
எவ்விடத்தும் மரணம் தான்
மாறாத கடவுள்
வாழ்கையை உணர
மரணம் தந்த சலுகை…மருத்துவம் ..
தள்ளி போடுவதற்கும்
தாமதபடுத்துவதற்கும்
மருந்துகள் கண்ட …கல்வி
அந்தஸ்து ,அதிகாரம்
பதவி , பணம்
அத்தனைக்கும் அசராத வித்தை… மரணம்
சக மனிதன்
மரணத்தை சந்தித்த சந்தர்ப்பங்கள்
சொல்லி கொடுக்கிறது
வாழ்வின் சில கட்டாயங்களை
யார் செத்தும் யார் போயும்
எழுப்பி கொணர முடியாது என்பதே
உண்மை
மனிதன் வகுத்த
இந்த சம்பிரதாயங்கள்….
பிறப்புகள் தீர்மானிக்கும்
உறவுகள் ,உரிமைகள்..
சமுதாயத்துக்கான சட்டங்கள்
மனிதன் படைத்த கடவுள்…
காதல், கல்யாணம்
இவற்றில் எவை வேண்டுமானாலும்
காலத்தால் பொய்யாய் போகலாம்…
மரணம் பொய் ஆவதில்லை
எப்பொழுதும்