அமராவதி அமரர் ஆனார் — மார்ச் ,2009
அமராவதி -அம்மாவின் சகோதரர்
பெண்ணாய் பிறந்ததற்காய்
ஒரு நாளும் வருத்தப்படாத என்னை
இன்று வருத்தப்பட வைத்தவர்
பெற்றவளை ஒரு நாளும் கண்ணீர் வடிக்க விட கூடாது
என்று இருந்த என்னை
என் கடமை உணர்ச்சியை
குற்ற உணர்ச்சியாய் மாற்றித்தான் போனது
அவர் மரணம்
கடைசியாய் ஒரே முறை
அவர் முகத்தை பார்க்காமல் போனதற்காய்
நாளும் ,பொழுதும்
அழுது புலம்பி ஆத்திரபடுகிறாள்
எதை செய்து அவள் சோகம் தீர்க்க ??
காலம் இருக்கிறது காயங்கள் ஆற்ற
மகனாய் பிறந்திருந்தால்
மற்ற சாஸ்திரங்கள் அனைத்தும்
தூக்கி எறிந்து விட்டு
அவள் சார்பாய் கடமை செய்ய போயிருப்பேன்
செய்ய முடியாத காரியத்துக்கு
சொல்ல கூடாது .. சொந்த காரணங்கள்
மனைவிக்கு முன்னால்
கணவன் போக வேண்டும்
அவள் பிறந்த வீட்டு கடமை தீர்க்க
பெற்றவருக்கு முன்னால்
பிள்ளைகள் போக வேண்டும்
காரியங்கள் ஆற்ற….
நாளும் கிழமையும்
நல்ல நேரமும்
பார்த்து பார்த்து
பஞ்சாங்கத்தோடு வாழந்தாலும்
மரணம் மட்டும்
வருகிற போது
சொல்லாமல் கொள்ளாமல் தான் வரும்
மறந்து விடாதீர்கள்
எது நடந்த போதும்
எப்படி நடந்த போதும்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது…
பெண்ணை பெற்றதால்
பெண் மீது வைத்த பாசத்துக்கு,
அவள் எதிர்காலத்துக்கு ….
எத்தனை விலை கொடுக்கிறாள் அம்மா
கட்டிய கணவன்
தடை சொல்லவில்லை அவளை ….
பேர் சொல்லவும்
போவென்று உரிமையோடு அனுப்பவும்
ஒரு மகனை பெற்று வைக்கவில்லை என்று கலங்குகிறார்
பெற்ற மகள்கள் ஏதும் பேசவில்லை
வாயுள்ள ஊமைகள் …
அவர்தம் உறவுகள் இதோ……..
ஒரு தொலைபேசி அழைப்பு
“நீங்க போறது நல்லதில்லை , என் மனசுக்கு இது திருப்தியாக இல்லை என்ன செய்வது எனக்கும் வருத்தமாக தான் இருக்கிறது.. “
“நாங்களும் போகலை ,கோயிலுக்கு நேர்ந்துகிட்டு இருக்கோம் “
என்று மருமகன் அஸ்திரம் வீசுகிறார்
ஆறுதல் சொல்லுங்கள்
என்று கணவன்மார்களை
கையெடுத்து கும்பிட்டு கெஞ்ச வேண்டி இருக்கிறது
எத்தனை எடுத்து சொன்னாலும்
அப்புறம் என்று
நிதானமாய் தள்ளி போடுகிறார்கள்
எப்போ பேசினா தான் என்ன .?…
என்பதாய் தோன்றும் போலிருக்கிறது
மனைவி என்று வருகையில்
அடுத்தவன் மகள் என்றே அலட்சியமோ
அவளெல்லாம் ரத்தமும் சதையும் கொண்டு
உணர்ச்சி மிக்க
உயிராய் பிறக்கவில்லை என்ற நியாபகமோ
யாரை கேட்பது ?
பெண்மக்கள் ஜீரணித்து கொள்ள முடியாத நிஜம்
மனைவிக்கும் பெற்றவர்கள் இருப்பார்கள்
பெரும் பாசத்தோடு வளர்த்திருப்பார்கள்
என்பதை
தாலி கட்டியவுடன்
எல்லா ஆண்மக்களும் மறப்பது தான்
மறந்து விடாதீர்கள்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது
அடிப்பதும் கொல்வதும் தான்
வன்முறை என்று
யாரேனும் சொன்னால்
அந்த கருத்தை மறுக்கிறேன்
என்னை மன்னியுங்கள்
அடுத்தவர் அழுகையில்
ஏன் என்று கேட்காததை
எழுந்து கண்ணீர் துடைக்க வராததை
என்னவென்று சொல்லுவது ?
நாகரிகமான வன்முறைகள் …. என்றா
கவலை படாதீர்கள் ஆண்மக்களே
இது ஒரு குமுறல் …..மட்டுமே
குறை கூறுதல் இல்லை …
மறதி என்ற ஒன்று
இந்த மாதிரி விசயத்தில்
மனைவிகளுக்கு இல்லாது போனால்
எவரும் கணவன் என்று அருகே நிற்க முடியாது
மறந்து விடாதீர்கள்
மரணம் எல்லாருக்கும் பொதுவானது
அண்ணன் ,தங்கை என்பதெல்லாம்
வயதும், வாழ்க்கையும் ஓடுகிற ஓட்டத்தில்
மாறி விடவா போகிறது….
இல்லை.. மரணம் தான் மாற்றி விட போகிறதா
இங்கே பாசத்தை
அவர்கள் சொல்லிகொண்டதில்லை என்பதை தவிர
பெரிதாய் ஒன்றுமில்லை
வாரத்தில் இரு நாட்களாவது வீட்டுக்கு வந்து விடுவார்
“இந்த வழியா வாக்கிங் போனேன் அப்படியே
வள்ளியம்மாவை பாத்துட்டு போலாம்னு வந்தேன்” என்பார்
சாப்பிடுகிற விசயத்தில் இருந்து
சாஸ்திரங்கள் வரை எல்லாவற்றிலும்
விவாதம் பண்ணி கொண்டு தான் இருப்பார்கள்
அண்ணனும் தங்கையும்
ஆண்பிள்ளை என்கிறதால்
சலுகைகள் அதிகம் கொண்டு வளர்ந்தான்
என அம்மா வாதிட்டு கொண்டிருப்பாள்
ஆனால் பிள்ளைகள் நாங்கள் எதிர்த்து பேசி விட்டால்
காலத்துள் அடங்காது
அவன் செய்த நன்றி ………
அதை எப்போதும் மறக்க கூடாது என
கடந்த காலத்தை விவரிப்பாள் ……
காவியம் படைக்கிற பாசமில்லை தான்
ஆனால் நன்றி மறப்பது நன்றில்லை தானே
“நீங்கள் போயிருக்கலாம்”
“போக வேண்டாம்னு யாரு சொன்னாங்க “
கேள்விகளுக்கோ ,
“நானா சாக சொன்னேன்” என்ற
உங்கள் கோபத்துக்கோ
பதில் இல்லை….
குற்றம் சாட்டுதலும் இல்லை
எங்களிடம்…..
பெண்ணை பெற்றவன்
எவ்வளவு பாவம் செய்தவன் என்பதை
இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்
சொல்லி கொடுக்கிறது பாடங்களை
யார் செத்தும் யார் போயும்
எழுப்பி கொணர முடியாது என்பதே
உண்மை
மனிதன் வகுத்த
இந்த சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்
பிறப்புகள் தீர்மானிக்கும்
உறவுகள் ,உரிமைகள்..
வைபவங்கள்,விழாக்கள்
கடவுள்
காதல், கல்யாணம்
இவற்றில் எவை வேண்டுமானாலும்
காலத்தால் பொய்யாய் போகலாம்…
மரணம் பொய் ஆவதில்லை
எப்பொழுதும்