பல நாளாய்
பழகி கிடந்த தோழர்களிடையே
இடைவெளி வந்ததற்கு ….
கண்டு காணாதது போல் கடப்பதற்கு
காரணம் கேட்டால் …
எத்தனையோ காரணங்கள் சொல்லுவார்கள் …
நேரம்… தூரம் … .. பணம் …
ஏன் அவன் என் தொலைபேசிக்கு அழைப்பதில்லை ?
அவன் என் பிறந்த நாளாய் மறந்து போனான் …..
குடும்பம் வந்த பிறகு மாறி போனாள் என்று ….
நிஜம் என்பது
இந்த எதிலும் இல்லை..
என நினைக்கிறேன் நான் ..
பொறுப்புகள் , கடமைகள் வந்து சேர்ந்ததை போலவே…
நான் என்கிற எண்ணத்துக்கு நீருற்றி ….
வளர்ந்து விட்டதற்கான தண்டனையாய் -மனம்
வளராமல் போவதற்கான நிந்தனையாய்
அடுத்த மனிதனிடமிருந்து அந்நியப்படுத்த
காலம் கட்டுகிற
கனமான தடுப்பு சுவர்கள்
என்னிடம் எந்த காரணமும் இல்லை ..
உன்னை நினைவுபடுத்துவதற்கு…
ஒரு நாளின் எத்தனையோ நிகழ்வுகள் காத்திருக்கின்றன
உன்னிடம் பேச பணம் செலவழிகிறதென்றால் …
என் சம்பாத்தியத்திற்கு
நானே ஒரு சுமை
நேரம் செலவழிகிறதென்றால்
என் ஆயுள் குறைகிறதென்று அர்த்தம்
நேரம் இல்லை என்றால்
நான் வாழவே இல்லை
மூச்சு விட நேரம் இருக்கிற வரை
நான் உன்னை தொடர்பு கொள்ள ..
எத்தனையோ சாதனங்கள்
விஞ்ஞனத்திற்கு நன்றி
மரணம் என்பதை தவிர
மிக பெரிய தூரத்தை
நானும் உணர்வதில்லை …
வருகிற மெயில் -களில் எல்லாம்
உன் பெயரை தேடி அலுத்து விட்டேன் …
புகார் சொல்ல மனம் வரவில்லை ..
ஏன் எனில்
எனக்கு உன்னை பற்றி தெரியும்
75 சதவிகிதம் வேலை ..
10 சதவிகிதம் சோம்பேறித்தனமும்
5 சதவிகிதம் அலட்சியமும்
என்னை பற்றி உனக்கும் …
60 சதவிகிதம் யதார்த்தம் ,
30 சதவிகிதம் ஏக்கம்
10 சதவிகிதம் சுயகௌரவம்
இங்கே கடமைகள் .. இருக்கின்றன ..
உறவுகள் ,சுற்றம் என்று
சமுதாயத்தில் ஓட ஆரம்பித்து விட்டோம் …
நான் தோற்று விட்டேன் ..
கடைசி வரை உனக்காக நானும் என்று
சில வாக்குறுதிகளையும் , வார்த்தைகளையும் ..
அதன் கனம் தெரியாமல் ..
கொடுத்து விட்டு
வாழ்ந்து பார்க்கையில்
தான் வலிக்கிறது … மனதுக்கு
எத்தனையோ நிகழ்வுகளுக்கிடையே
என் சந்தோசத்திற்காக
எதையோ காப்பாற்ற பாடுபடும்
உன்னை குற்றம் சாட்ட
காரணங்கள் எப்படி தோன்றும் ?
திரும்பவும் சொல்கிறேன்
எட்டி இருப்பதற்கான
காரணங்கள் ,கோபங்கள்
எதுவும் இல்லை என்னிடம்
உயிர் இல்லாத ஒன்றை பத்திரப்படுத்தி வைப்பது,
பெயரளவிலாவது பகிர்வது
போன்ற செயல்களில்
விருப்பம் இல்லை எனக்கு …
சாலையோர விபத்துகளில்
செத்து போகிற
ஒரு முகம் தெரியாத மனிதனுக்கான அஞ்சலியாய்
மாறி போகிறது
நட்பு சில நேரங்களில்
அப்போதெல்லாம்
என்னிடம்
திருவிழாவில் நடந்த கலவரத்துக்கு
திருக்கோயிலை பூட்டுகிற
வழி தான் இருக்கிறது.
மாறி போனதை
மறந்து போனதாய் சொல்லி சோகப்படாதே ..
பத்திரமாக தான் இருக்கிறாய்
எனக்குள் எப்போதும் ……..
நல்லா எழுதறீங்க…
நட்பு கூட இந்த அளவுக்கு ஒருத்தர பாதிக்குமான்னு நம்ப முடியல..பார்ப்போம் 2009 ஜூன் – க்கு அப்பறம்..
என்ன சொல்றீங்க ??